புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்

அடர்த்தியான நாவல்

 இந்த நாவலுக்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று ஒரு மணி நேரத்துக்கு மேலாக கணினி முன் அமர்ந்திருக்கிறேன். எங்கே ஆரம்பிப்பது, எதையெல்லாம் எழுதுவது என்று ஏதும் தோன்றவில்லை. திக் பிரமை பிடித்து அமர்ந்து இருக்கிறேன். ஒரு மணி நேரம் கழித்தும் மேற்கண்ட வரிகளைத்தான் எழுத முடிகிறது. ஒரு வார்த்தை, ஒரு வாக்கியம் அகப்படவில்லை.

 புயலிலே ஒரு தோணி, ஒரு பிரம்மாண்ட கேன்வாஸ். அதை நினைத்தாலே மூச்சடைக்கிறது. இந்த ஆள் எப்படி ஐயா இதை எழுதினான் என்று அடிக்கடி வியந்து போயிருக்கிறேன். ஒரு அத்லெட்டிக் வீரனைப்போல கடுமையான நெஞ்சுரமும், உடல் வலிமையும், எப்போதும் மனதின் உள்ளே காட்டுத்தீ போல எரிந்து கொண்டே இருக்கும் ஒருவனால்தான் இப்படி எழுத முடியும்.

 நாவல் விமர்சனம் என்ற பெயரில் நான் கதையை சொல்லப்போவதில்லை. இந்த நாவலின் கதை என்ன என்பதையும் ஒருவராலும் சொல்லிவிட முடியாது. கதையைத் தவிர நாவலைப்பற்றிய என் பார்வையை சொல்ல முயல்கிறேன். பல சூட்சுமங்களைக் கையாண்டுகொண்டே போவதின் மூலம் படிப்பவர்களுக்கு, பத்து பேரின் வாழ்வை வாழ்ந்து பார்த்த நிறைவை கொடுத்துவிட்டுச் செல்கிறார் ப.சிங்காரம். ஆம், இதைப் படித்தவர்களுக்கு இது ஒரு பிரம்மாண்டமான வாழ்வனுபவம்.

 முதலில் மொழிநடையைப் பார்த்து விடுவோம். இதைப் படித்த பலரும், முதல் பத்து பக்கத்திலேயே, எனக்கு இது புரியலை. இந்த நடை சிரமமா இருக்கு அல்லது போர் அடிக்கிறது என்கிறார்கள். எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், நல்ல இலக்கிய வாசகராக அறியும் பலருமே இப்படி சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

 நம்மூரில் வரலாற்று நாவல்கள் என்றாலே சேர சோழ பாண்டிய காலத்துக்குச் சென்று விடுவார்கள். அதிலும் விம்மித்தணியும் முலைகளே நாவல் முழுக்க வியாபித்து இருக்கும். ஏன்தான் பழந்தமிழ் ஆட்கள் அந்தப் பாவப்பட்ட முலைகளை வெட்டியாக விம்மித்தணிய வைத்தபடிக்கு இருந்தனர் என்ற கோபம்தான் ஏற்படும். புயலிலே ஒரு தோணி இரண்டாம் உலகப்போர் பின்னணியில் எழுதப்பட்டு உள்ளது. வரலாற்றை மாற்றாமல், அந்த காலகட்ட வரலாற்றினூடே தன் கதாபாத்திரங்களை உலவவிட்டு, கிரிஸ்ப்பான ஒரு நாவலை கடைந்தெடுத்துவிட்டார் சிங்காரம். பல நாடுகளில் நாவல் அலைவதாலும், பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகளை நாவல் கையாள்வதாலும், முதலில் சிலருக்கு வாசிப்பதில் சிக்கல் இருக்கலாம். இந்த நாவலை நீங்கள் கூச்சமுள்ள அழகான பெண்ணைப்போலத்தான் கையாள வேண்டும்.

 இந்த நாவலின் நடை தனித்துவமானது. ஆனால் ப.சிங்காரம் மெனக்கெட்டு தனக்கென ஒரு மொழிநடையை உருவாக்கிக் கொள்ளவில்லை.

 கதை நடக்கும் இடம், மாந்தர்கள், சூழ்நிலையைப் பொறுத்து மொழி நடை இயல்பாக அமைந்து விடுகிறது. ஒரு இறுக்கமான சூழலில் நாவல் பயணிக்கும்போது, அந்த மொழி நடை என்னையும் இருக்கமான உணர்வுக்குத் தள்ளி விடுகிறது. யாரென்றே தெரியாத தேசத்தில், யாரையும் அறியாத தேசத்தில் தனியனாக நான் சுற்றிக்கொண்டு இருந்தால், என்ன உணர்வில் இருப்பேனோ, அதே உணர்வை கதையின் நாயகன் பாண்டியன் சுற்றிக்கொண்டு இருக்கும்போது எனக்குக் கடத்திவிடுகிறார் ப.சிங்காரம். இது அந்த கச்சிதமான மொழிநடையால்தான் சாத்தியம் ஆகிறது. இந்த நடை நாவல் முழுக்க, உறுத்தாமல்,யாருக்கும் தெரியாமல் மாறிக்கொண்டே இருக்கிறது. அநேகமாக ப.சிங்காரத்திற்கே தெரியாமல்தான் இந்த மேஜிக் நடந்து இருக்கும். இந்த ரஸவாதம் எப்படிச் சாத்தியம் என்றால், ப.சிங்காரம் எழுதிக்கொண்டு இருக்கும்போது பேய் போல பித்துப்பிடித்தது போல அந்தந்த ஊர்களுக்கு மனதளவில் பாய்ந்துபோய் அமர்ந்து இருப்பார். அந்தந்த கதாபாத்திரத்தின் மனதிற்குள் முழுக்க சஞ்சாரம் செய்திருப்பார். மன திடமும், ஸ்டெமினாவும் இல்லையென்றால் இந்த வகையில் எழுதும்போது பைத்தியம் பிடித்துவிடும். ரத்தம் சுண்டி , எலும்பு நொறுங்கி தளர்ந்து ஒரு செத்த எலிக்குஞ்சு போல விழுந்து விடக்கூடும். 

‘ப்ளஷர் ஆஃப் டெக்ஸ்ட்’ என்று சொல்வார்கள். இந்த நாவலில் இது பல பரிணாமங்களில் வெளிப்படுகிறது. இப்போது மால்களில் 4டி , 5டி மூவீஸ் என்று நீங்கள் பார்த்து இருக்கலாம். இதையெல்லாம் ப.சிங்காரம் புயலிலே ஒரு தோணியில் செய்துவிட்டார். வெவ்வேறு பிரதேசங்களில் பேசப்படும் மொழிகள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. அங்கே நிலவும் தட்ப வெட்ப சூழல் உடலுக்கு உறைக்கிறது. கிளம்பும் புழுதி மண்டலத்தில் மூச்சு முட்டுகிறது. வெறுமையான தெருக்கள் வருகையில், மனம் டிப்ரஷனுக்கு போகிறது. இந்த நாவலுக்கு உங்களை நீங்கள் முழுக்க ஒப்புக்கொடுத்து விட்டால், கடலில் பயணப்படலாம். போர் முடிந்த தெருக்களில் பயத்துடன் உலா வரலாம். கொண்டாட்டமான பழைய காரைக்குடி தெருக்களில் நிம்மதியாக அலையலாம். ஊர் பேர் தெரியாத நாட்டில் ஏதோ ஒரு ரொஸ்தாரந்தில் அமர்ந்து வெளிநாட்டுப்பெண்கள் உணவருந்துவதை விநோதமாக பார்த்துக்கொண்டு இருக்கலாம்.

 உதாரணமாக, நாவலின் ஆரம்பத்தில் வரும் ஒரே ஒரு சின்ன காட்சியை மட்டும் சொல்கிறேன். தெரு சந்திப்பில், சண்டையின் போது வெட்டிய தலைகளை மட்டும் மேடையில் வைத்துக்கொண்டு , ஒரு சிப்பாய், அந்த முண்டங்களுக்கு தலைவாரி விட்டுக்கொண்டு இருப்பான். இந்தக் காட்சியை ப.சிங்காரம் விவரிக்கும்போது, அந்த இடம், அந்த தெரு, அந்த முண்டங்கள், அந்த சிப்பாய் தலைவாரி விடுவது, பொதுமக்கள் மிரண்டு விலகி செல்வது என ஒரு ஓவியம் போல நம் மனதில் பதிவாகும். இதைப்போல எனக்கு நூற்றுக்கணக்கான ஓவியங்கள் மனதில் பதிவாகிக்கொண்டே வந்தன.

 கதை செல்லும் போக்கில் அந்த ஊர் மக்களின் உணவு வகைகள், பேச்சு வழக்குகள் என்று அவர் உபயோகித்துக்கொண்டு போவதால் முதலில் சற்றே அந்நியமாகத் தோன்றினாலும் 40 பக்கம் தாண்டிவிட்டால் நீங்கள் ஒரு புத்தம்புது உலகத்துக்குள் சென்று விடுவீர்கள். இதுவரை கிடைக்காத வாசிப்பனுபவம் கிடைக்கும். இந்த நாவலின் கதைக்களன், இதன் பரந்து விரிந்த கதைப் போக்கு, மனிதர்களின் குணாதிசயங்களை அவர் விவரிக்கும் பாங்கு என அனைத்தும் இலக்கிய உலகுக்கு முற்றிலும் புதிதானது. அதனால்தான் சிலருக்கு ஆரம்பத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது. ’ரொமாண்டிசிசமையே’ படித்துப் பழக்கப்பட்டவர்கள் முதலில் திணறுவது இயல்புதான்.

 ஒரு சிலை வடிக்கும்போது, கூடுதலாக ஒரு உளியின் செதுக்கல் அல்லது ஏதேனும் நீட்டிக்கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஏதும் இல்லாமல் இருப்பதுதான் நல்ல சிற்பம். ஆனால் எழுத்தில் அப்படி இல்லை. தேவையில்லாத நிறைய சொற்கள் பல நாவல்களில் கொட்டிக் கிடக்கின்றன. அதுதான் நமக்கு தூக்கம் வந்து விடுகிறது. புயலிலே ஒரு தோணியில் தேவையில்லாத ஒரு சொல் கிடையாது. அது மட்டுமல்லாமல், நாவல் முழுக்க நிரம்பிக் கிடக்கும் அடர்த்தி பிரம்மிக்கத்தக்கது.

 உலக இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், பிரச்சாரத் தொனியோ, நேரடியாக ஒரு விஷயத்தை வாசககனின் சிந்தனைக்கு இடம் கொடாமல் கடத்துவதோ கூடாது. இந்த நாவல் பரந்து விரிந்து எங்கெங்கோ பயணித்துக்கொண்டே, பல்வேறு விஷயங்களை வாசகனின் கற்பனைக்கு நிரப்பிக்கொள்ளுமாறு விட்டுச்செல்கிறது.

 இந்த நாவல் பயணிக்கும் பின்னணியில் சிங்காரம் கொடுக்கும் உணர்வுகளையும், தரவுகளையும் கொண்டு கிட்டத்தட்ட 100 சிறுகதைகள் எழுதி விடலாம். நூற்றுக்கு மேல் சிறுகதைகளை தன்னுள்ளே ஒளித்து வைத்துக்கொண்டு, நாவலாக இது உருப்பெற்று இருப்பதால்தான் நாவல் இவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது.

 கதை நடக்கும் தேசங்களெங்கும் ப.சிங்காரம் சென்று வந்திருப்பார் என்று நினைக்கிறேன். பாண்டியன் என்ற கதாபாத்திரம் பேசுவது மட்டும் ப.சிங்காரத்தின் குரல் போல ஒலிக்கிறது. எழுத்தாளர் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்வது தவிர்க்க முடியாததுதான். தமிழர்களையும், தமிழர்களின் பழம் பெருமைகள் என்பனவற்றை பாண்டியன் கிண்டல் அடிக்கும்போது மட்டுமே சிங்காரம் கொஞ்சம் முட்டிக்கொண்டு தெரிகிறார். மற்றபடி பாண்டியன் பயணிக்க ஆரம்பித்ததும் சிங்காரம் பாண்டியனை விட்டு கீழே இறங்கி விடுகிறார்.

 மற்ற நாவல்களை படித்துக்கொண்டிருக்கும்போது, அடுத்து என்ன ? கதை எப்படி முடியும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். படிப்பதை விட்டுவிட்டு அடுத்ததுக்கு பறப்போம் இந்த நாவலில், அடுத்து என்ன ? கதை எப்படி முடியும் என்றெல்லாம் தோன்றுவதேயில்லை. ஏனென்றால் படித்துக்கொண்டு இருக்கும் விஷயத்திலேயே மயங்கி கிடக்கின்றோம். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டுகையில், அடடா இந்த நாவல் முடிந்துவிடக்கூடாதே என்று இருக்கிறது.

 உலக இலக்கியத்தில் டாப் 10 க்குள் வரக்கூடிய இந்த புயலிலே ஒரு தோணி, தமிழகத்திலேயே இன்னும் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. சாரு நிவேதிதாவும் , ஜெயமோகனும் இதைச் சமீபத்தில் பேசியும் எழுதியும் புத்துயிர் கொடுத்தார்கள். வேறு நாட்டு எழுத்தாளர் இந்த நாவலை எழுதி இருந்தால், மொத்த தேசமும் கொண்டாடி, அந்த எழுத்தாளருக்கு புக்கர் அல்லது நோபல் பரிசு வாங்கிக்கொடுத்துவிட்டுத்தான் ஓய்ந்திருக்கும். தமிழ் எழுத்தாளர்கள், அநியாயத்துக்கு தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். அவர்கள் வெளிநாட்டு எழுத்தாளர்களைத்தான் கொண்டாடுவார்கள். வாயில் நுழையாத நான்கு பேரின் கவிதைகளை உளறிக்கொண்டு திரிவார்கள். எழுத்தாளர்கள் இவ்விதம் எனில் அரசும், பொதுமக்களும் மர மண்டைகள். அவர்களுக்கு எழுத்தாளர், இலக்கியம், எழுத்து, நாவல் இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது.

 இந்தச் சூழ்நிலையில் இந்த நாவலை உலக அளவுக்கு கொண்டு செல்ல வேண்டியது படிக்கும் ஒவ்வொருவரின் கடமை ஆகிறது.

 இந்த அற்புதமான நாவல் இந்திய மொழிகளில் எதிலும் மொழிபெயர்க்கப்படவில்லை என்று அறிகிறேன். எந்தப் பல்கலை கழகத்திலும் பாடமாகவும் இருக்காது. அதற்குத்தான் வைரமுத்துவும் விவேக்கும் இருக்கிறார்களே.

 சிங்காரத்தின் முதல் நாவலான ”கடலுக்கு அப்பால்’’ என்ற நாவல் மட்டும் மலேஷியாவைச் சேர்ந்த கார்த்திகேசு என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதையும் யாரும் முன்னெடுக்காததால் அதுவும் கிணற்றில் போட்ட பாறைதான். உறுதியான செய்தியா என்று தெரியவில்லை, புயலிலே ஒரு தோணியையும் திரு.கார்த்திகேசு மொழி பெயர்க்க ஆரம்பித்ததாகவும், பணி  பாதியில் இருக்கும்போதே அவர்  இறந்துவிட்டதாகவும் ஒரு நண்பர் மூலம் அறிந்தேன்.

 இனிமேலாவது இவரது இரண்டு நாவல்களையும் சரியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உலக சமுதாயத்திடம் கொண்டு சேர்க்க வேண்டியது, இந்திய எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கடமை.

 

- அராத்து

 புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்

நற்றிணை பதிப்பகம்