பதின் - எஸ்.ராமகிருஷ்ணன்

நாஸ்டால்ஜியா

 பரபரப்பான வாழ்க்கையில் சிறுவயது நினைவுகளை எல்லாம் நிதானமாய் அசை போட யாருக்கு நேரமிருக்கிறது? நேரம் மட்டுமல்ல அதற்கான மனநிலை வாய்ப்பதும் அரிதாகவே இருப்பது நாம் வாழும் காலத்தின் சோகம். கிராம வாழ்க்கையோ நகர வாழ்க்கையோ பால்யகால வாழ்க்கைக்கென்று ஒரு தனி சுவை உண்டு. அந்தி நேரம் மொட்டை மாடி வானமும் அதிகாலைக் கனவுகளிலும் கண் சிமிட்டி விட்டுப் போகும் கணங்கள் பதின் பருவம் வரையிலான மனநிலையை மீட்டெடுப்பவை. எஸ்.ரா வின் நாவலான பதின் அந்த அலாதியான அனுபவங்களைச் சில நாட்களுக்காவது உங்களுக்கு மீட்டுத் தரும்!

நாக கன்னி, காமிக்ஸ், பயாஸ்கோப், கல்லில் கலைவண்ணம் கண்ட தனிமை, வயிறு நிரம்ப வாசனை என்று பத்துவயது வரையிலான நினைவுகள் மொத்தமும் கவிதையாய் அடை காத்திருக்கிறார். தொடர்ந்து குழப்பமும் சஞ்சலங்களும் நிறைந்த வளரும் பருவமும், குடும்பம், அப்பா, நண்பன் ஆகியோர் குறித்தான புதிய புரிதல்களுடன் பதின் பருவம் தொடங்கும் விதத்தைச் சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறார். அலாதியான அனுபவக் குறிப்புகள் அடங்கிய நாவல் பதின்.

எழுபதுகள் மற்றும் எண்பதுகள் கால கட்டச் சிறுவர்களின் அனுபவப் பதிவு இது. அவர்களின் கையில் இன்றைய சிறுவர்களிடம் இருப்பது போல் டிஜிட்டல் கருவிகள் இல்லை. திகட்ட திகட்டப்பார்க்கும் அனிமேஷன் படங்கள் தொலைக்காட்சி இல்லை. இயற்கையே அவர்களின் விளையாட்டு மைதானம். வானமே அவர்களின் வெள்ளித்திரை. அந்த அலாதியான அனுபவங்களை நந்தகோபால் என்ற சிறுவனின் பார்வையில் தனக்கே உரிய மிதக்கும் மொழிநடையில் வெளிப்படுத்தியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

-ஜெ.தீபலட்சுமி

பதின் - எஸ்.ராமகிருஷ்ணன்,

தேசாந்திரி பதிப்பகம்.