பன்மாயக்கள்வன் : ஆர்.பால கிருஷ்ணன்

பன்மாயக்கள்வன்

ஆதியில் பெயரிடப்படாத அவனுக்கும் அவளுக்கும் இடையில் எழுத்தறியாமல் தோன்றிய ஈர்ப்புமிக்க ஒருவரிதான் நாளைக்கும் யாராவது வந்து தொடரப்போகும் காதலின் நெடுங்கவிதையாக வளர்ந்துகொண்டிருக்கிறது. காதல் உணர்ச்சியின் தூய்மையை நிலத்தைவிட விரிவானதாக- வானத்தைவிட உயர்வானதாக, கடலைவிட ஆழமானதாகக்  கொண்டாடியதுதான் நமது இலக்கியங்களின் ஆகப்பெரும் உச்சம். முன்னும் பின்னுமாக வகுத்துத் தொகுத்து இதை வள்ளுவ உயரம் என்று எனக்கும் சொல்லத் தோன்றுகிறது. அறத்தை அறமாகச் சொன்னவன் பொருளைப் பொருளாகச் சொன்னவன் - காதலை காதலைவிடவும் இனிமையாகச் சொல்லியிருக்கிறான். தமிழ் எங்கள் இளமைக்குப் பால் என்று பாரதிதாசன் எழுதிய கணத்தில் அவனுக்குள் வள்ளுவனின் காமத்துப்பால்தான் பொங்கிப்பெருகியிருக்கவேண்டும்.

அதன் நீட்சிதான் ஆர்.பாலகிருஷ்ணனின் குறள் தழுவிய இந்தக் காதல் கவிதைகள். தமிழில் ஆழங்காற்பட்ட இவர், தமிழ்க் காதலர். தொன்ம ஆய்வாளர். ஆழ்ந்த கவியுள்ளம் கொண்டவர்.

பொருள்தேடிப் பிரிந்துசென்ற காதலனை எதிர்நோக்கி எதிர்நோக்கி அவளது விழிகள் ஒளியிழந்து காய்ந்தன. அவன் சென்ற  நாட்களைத் தொட்டுத் தொட்டு எண்ணி அவளது விரல்கள் தெய்ந்தன. இது வள்ளுவர் காலம். காலம் மாறுகிறது, காதல் மாறவில்லை. அன்று சுவரில் இட்ட கரிக்கோடுகளைத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்த விரல் இன்று வாட்ஸப்பில் தேய்கிறது.

முகநூல் சுவரில்
கிறுக்கிக் கிறுக்கி
கிறுக்குப் பிடிக்கிறது
வாட்ஸ் அப்
வாய்ஸ் கால் நன்று...
ஸ்கைப்ப்பில் பார்த்தால்
பேசமுடியவில்லை
அழுகைதான் வருகிறது

இது பாலகிருஷ்ண காலம். மடிக்கணினி விசைப்பலகையில் நாளொரு கவிதை.. சாம்சங் மெமோவில் தனிமைத் தமிழின் தவிப்பெழுத்து- இப்படி வள்ளுவனின் காதல் உள்ளத்தை இன்றைய இளம் தலைமுறைக்கும் இணைய தலைமுறைக்கும் நகர்த்தித் தேடவைத்து பை சார்ட் போட்டுப் பேசவைத்திருக்கிறார் பாலகிருஷ்ணன்.

அகத்திணையிலிருந்து காதல் புறத்திணைக்கு மெல்ல மெல்ல நிறம் மாறிக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் மலரினும் மெல்லிய காமத்தின் மெய்ப்பாடுகளை, பண்பாட்டு அசைவுகளை,  காதல் தமிழ் உரையாடல்களால் இப்படிக் கவனப்படுத்துவது இன்றைய தேவையாக இருக்கிறது.

பன்மாயக் கள்வர் பணிமொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை

என்கிற குறளில் இருந்து சொல்லெடுத்து இந்தத் தொகுப்புக்குப் பன்மாயக்கள்வன் என்று பெயரிட்டிருக்கும் பாலகிருஷ்ணன் அது வேறுயாருமில்லை; வள்ளுவன் தான் என்கிறார். எனக்குப் பாலகிருஷ்ணனையும் அப்படியே அழைக்கத் தோன்றுகிறது. இது அதீதம் இல்லை. “வள்ளுவர் இதைப் படிக்க நேர்ந்தால் பாலகிருஷ்ணனைப் பாராட்டுவார்’’ என்கிற பிரபஞ்சனை வழிமொழிதல்.’

-கவிஞர் பழனிபாரதி.

பன்மாயக்கள்வன் – ஆர்.பால கிருஷ்ணன்

பாரதி புத்தகாலயம் வெளியீடு.