ஒற்றைப்பல் – கரன் கார்க்கி

கோயில்தாஸின் உலகம்

ஒற்றைப்பல்  கரன் கார்க்கி எழுதிய நாவல். கோயில்தாஸ் என்கிற மன முதிர்வற்ற ஒரு மனிதன் அன்பினைக் கொடுத்தும் பெற்றுக் கொண்டதுமான வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிற நாவல். கோயில்தாஸ் தனதேயான பிரத்யேக மனஉலகில் சஞ்சரிக்கிறார். அந்த உலகத்தில் விருப்பும் வெறுப்பும் கொண்ட மனிதர்கள் வந்து போகின்றனர்.

ஓட்டை கொண்ட பாத்திரத்தில் தேங்கிய சிறு வண்டல் போல கொண்ட நினைவுகளை மட்டுமே நிஜமென நம்பியிருக்கும் கோயில்தாஸுக்கு யதார்த்தத்தை உணர்த்துவது அவரது உடல் சார்ந்த வலிகள் மட்டுமே.

நாவல் தனக்குண்டான களத்தில் அனைத்தையும் பற்றிப் பேசுகிறது. ஒரு குழந்தை போல கோயில்தாஸ் தெரிந்து வைத்திருக்கிற கடவுளுக்கும் கேள்விகளுக்கு பதில் தேடுகிற முதிர்மனம் கொண்ட சாரதா அறிந்திருக்கிற கடவுளுக்கும் இடையேயான புரிதல்கள்தான் நாவலின் மையம்.

இருவரில் ஒருவராய் இருந்துவிட்டால் கடவுள் குறித்து நாம் அச்சப்படத் தேவையில்லை என்கிற ஒரு மனநிலையை நாவல் தந்துவிடுகிறது.

பாதுகாப்பின்மை என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது என்பதை அழுத்திப் பேசுகிறது. குஷ்புவுக்குத் தேவை தன் உடலை பாதுகாத்துக்கொள்ள நாலு சுவர்கள் கொண்ட வீடு. சாரதாவிற்கு தன் உடலை ஊடுருவாத தெள்ளிய மனம் கொண்ட வாழ்க்கைத் துணை, கோயில்தாசுக்கு கடவுளும் சாரதாவும் வந்துலவும் தோட்டம் ...

ஒரு மனிதரின் வாழ்க்கை அவன் சந்திக்கும் போராட்டங்கள், மனிதர்கள் என்பதான பல இலக்கியப் படைப்புகள் நம்மிடையே உண்டு. அவற்றிலிருந்து ஒற்றைப்பல் முக்கிய தளத்தில் வேறுபட்டு நிற்கிறது. உடல், மனம் இரண்டுக்குமான முரண்களையும் சமன்களையும் பேசுகிற ஒரு படைப்பாக  அமைந்திருக்கிறது இது.

தன்னை பூ பறிக்கக் கடவுள் அழைத்துக்கொள்ள வேண்டுமென்பது கோயில்தாஸின் பெரும் ஆசை. அவருடைய ஒற்றைப்பல் தருகிற வலி கடவுளிடம் அவருக்கிருந்த கோரிக்கையைக்கூட மாற்றுகிறது.

ஒருவகையில் பார்த்தால் உள்ளும் புறமும் விளிம்பு நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாந்தர்களைப் பற்றிய நாவல் என்றும் சொல்லலாம்.

கோயில்தாசின் வாழ்க்கையை நாம் மீண்டுமாய் யோசித்துப் பார்க்கையில் நமக்கு முன்பிருப்பதுகேள்விகள் போன்ற பதில்கள், பதில்கள் போன்றதான கேள்விகள்”.

-ஜா. தீபா.

 ஒற்றைப்பல் - கரன் கார்க்கி.

டிஸ்கவரி புக் பேலஸ்