நிலவு தேயாத தேசம் – சாரு நிவேதிதா

நிஜங்களின் பதிவு

            பயணங்கள் ஒரு மனிதனின் ஆளுமையை, சிந்தனையை முழுவதுமாக மாற்றக் கூடியது. இதனால்தான் பயண நூல்களுக்கு உலகம் முழுக்கவே ஏராளமான வாசகர்கள் இருக்கிறார்கள். தமிழில் பயண நூல்கள் என்பதை ஆன்மிகச் சுற்றுலாக் கட்டுரை எழுதும் வஸ்துவாக மாற்றி வைத்திருக்கிறார்கள். ஒரு தேசத்தின் வரலாற்றை கலாச்சாரத்தை வாழ்க்கை முறையை தேடிக் கற்றுக்கொண்டு எழுதுகிற பழக்கம் நம் ஆட்களுக்கு கை கூடவில்லை என்பது துரதிர்ஸ்டம். தி.ஜா, தன் ஆஸ்திரேலிய அனுபவங்களை விலாவாரியாய் எழுதியிருப்பார். ஒரு எழுத்தாளான் மட்டுமே அவதானிக்கக் கூடிய ஏராளமான விஷயங்களை அதில் உணரமுடியும். அதற்கும் முன்பாக ஏ.கே.செட்டியார்.  உலகம் சுற்றித் திரிந்த செட்டியாரின் பயண அனுபவங்கள் நுட்பமானவை. ஆனால் சுவாரஸ்யமானவை அல்ல.

            சாரு இலக்கிய கட்டுரைகளைப் போலவே பயணக் கட்டுரைகளையும் மிக நுட்பமாக எழுதக் கூடியவர். தான் எதிர் கொள்ளும் எந்தவொரு மனிதர் குறித்தும் சம்பவம் குறித்தும் மாற்றுப் பார்வையை முன்வைப்பது அவரின் முக்கியமான அம்சம். சொல்லப் போனால் பொதுசமூகம் நம்ப மறுக்கும் நிஜங்களை எழுதுவது. நிலவு தேயாத தேசம் என்னும் இந்தப் பயண நூலிலும் அதையேதான் செய்திருக்கிறார். துருக்கியைப் புத்தகங்களின் வழியாகவும் திரைப்படங்களின் வழியாகவும் ஆழக் கற்றுக்கொண்டபின் அங்கு பயணிக்கையில் அவர் துருக்கியைப் பற்றி மட்டும் எழுதவில்லை. அராபிய சமூகத்தின் மீது உலக நாடுகள் வைக்கும் பொய்யான பார்வைகளைக் களைத்துப் போடுகிறார். ஆர்மீனியர்களுக்கும் துருக்கியர்களுக்குமான நீண்ட நெடிய யுத்தத்தை எழுதுகிறார். ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் ஆழமான வேர்கள் இன்னும் துருக்கிய சமூகத்திற்குள் ஊடுருவி இருக்கின்றன. ஃபாமுக் மாதிரியான மிகச் சிறந்த எழுத்தாளர்கள் கூட திரும்பத் திரும்ப அதன் எச்சங்களை எழுதியபடியே இருக்கிறார்கள்.

            இஸ்தான்பூல் குறித்த நீண்ட வரலாற்றுத் தகவல்களையும் கடந்த காலமும் நிகழ் காலமும் ஒருங்கே அங்கு பிணைந்திருப்பதின் தரிசனத்தையும் இந்த நூலை வாசிக்கையில் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. துருக்கியர்களுக்கு இருக்கும் நீண்ட தனிமை யுத்தங்களால் மட்டுமே நிகழ்ந்ததல்ல; அங்கு சூழும் பனியாலும் நிகழ்ந்த ஒன்று. பனி ஐரோப்பாவின் துயரம் என்பதை சாருவின் இந்தப் பயண நூல் நமக்கு உணர்த்துகிறது.  எந்த ஹோட்டலில் தங்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டுமென்கிற டூரிஸ்ட் கைடு வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு  மற்ற சமூகத்தினரோடு எவ்வாறு பயணங்களில் ஒன்று கலந்திட வேண்டுமென்பதை சாரு தொடர்ந்து சொல்லி வருபவர். நாம் அறிமுகமற்ற மனிதர்களின் மீது நம்பிக்கையற்றவர்கள். ஆனால் ஒரு நல்ல பயணிக்கு மனிதர்கள்தான் பயணங்களின் துருப்புச் சீட்டு. பயணத்தை விரும்பும் கொண்டாடும் எல்லோருக்கும் இந்த நூல் ஒரு பொக்கிஷம்.

-லஷ்மி சரவணகுமார்

 நிலவு தேயாத தேசம் – சாரு நிவேதிதா.

ஸீரோ டிகிரி பதிப்பகம்