கொமோரா - லக்ஷ்மி சரவணக்குமார்

நியாயங்களில் கூடுமிடம்

“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்கிற பரிசுத்த வேதகாமத்தின் வாசகத்தையே தனது உள்ளார்ந்த இயக்கமாக கொண்டிருக்கிற ஒரு இலக்கியப் பிரதியாகவே கொமோரா புதினம் எனக்குள் ஊடுருவியுள்ளது. லக்ஷ்மி சரவணக்குமாரின் புனைவுகளில் வருகிற  பாத்திரங்களிடம் எப்போதுமே இருக்கிற வன்முறையும், வெறுப்பும், வன்மமும் இந்த சமூகம் ஏற்க மறுக்கிற மனவுலகமும் மிகத்தீவிரமாக ஆராயப்படவேண்டியவை. இந்த நாவலில் எழுதப்பட்டவையைவிட எழுதப்படாமல் போனவைதான் இன்னும் அதிதீவிரமான வாழ்வாக எஞ்சியிருக்குமென்று உணரமுடிகிறது. குறிப்பாக கலைத்தன்மையின் உள்ளார்ந்த அடுக்குகளோடு தமிழில் எழுதப்பட்டிருக்கும் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் கொமோரா தன்னை நிலைநிறுத்தியுள்ளது எனலாம்.

“தந்தையைக் கொல்லும் மகன்” இந்த நாவலின் பிரதான பாத்திரமாக வருகிற கதிரின் நேரடியான இலக்கு இதுதான். மகனின் அகவுலகத்தில் இப்படியானதொரு வன்ம வேட்கையை ஏற்படுத்திய சம்பவங்களை வாசகனுக்கு உணர்த்தும்படியாக மிகையில்லாமல் சித்திரித்திருக்கிறார் நாவலாசிரியர். நாவல்  இதனை நோக்கியே பயணித்தாலும் பல்வேறு களங்களில் தன்னை அடையாளப்படுத்துகிறது. “கம்போடிய டயரிக்குறிப்புகள்” வழியாக அங்குள்ள சம்பவங்களை குறிப்பிடும் இந்த நாவலின் அத்தியாயம் மிகமிக முக்கியமானது. சலிப்பூட்டக்கூடிய களங்களில் நிறையக் கதைகளைக் கேட்டுப்பழகிப்போன தமிழ் வாசகர்களுக்கு இந்த கொமோரா நாவல் ஒரு புதியவகை அனுபவம். கதிருக்குத் தோன்றிய வன்முறையின் அதிபயங்கரத்தின் தீர்மான நியாயங்களையும், வெறுப்பின் இரைச்சலையும் சூழ எழுதியிருக்கிறார். இந்தத் தலைமுறையில் எழுதுகிற வாசிக்கிற இரண்டு தரப்பினருக்கும் லக்ஷ்மி சரவணக்குமாரின் எழுத்துக்கள் ஏதோவொரு வகையில் அவசியமானதாகவே உள்ளது என்கிற என்னுடைய எண்ணத்திற்கு பெரியதொரு ஆமோதிப்பாக கொமோரா நாவலே துணைக்கு நிற்கிறது.

ஆதியாகமத்தில் குறிப்பிட்டிருக்கும் படியாக பாவங்களுக்காய் அழிக்கப்பட்ட நிலங்களில் ஒன்றான “கொமோரா” என்கிற இந்த பெயர் நாவலுக்கு சாலப்பொருந்தியுள்ளது. அடியாழத்தின் உள்ளே உழன்று கொண்டிருக்கும் மொத்தமான மனித வெறுப்புக்களையும் பழியுணர்வுகளையும் மூன்றாம் உலகத்தின் அகச்சிக்கல்களோடு தனிப்பெரும் கதையாக எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியான தமிழகத்து நாவல்களில் தனித்துவமான தனிப்பெரும் நிகழ்வு என்றே எனக்குப்படுகிறது. லக்ஷ்மி சரவணக்குமாரின் கதைசொல்லல் முறையும் அவரின் கதைக்களங்களும் ஒரு மேற்தட்டு மனநிலைக்கு ஏற்படுத்தும் ஒவ்வாமையை செய்துகொண்டே இருக்கிறது, ஏனெனில் அவரின் கண்கள் விளம்புநிலையில் உள்ள உதிரிகளையே இந்தச் சமூகத்திற்கு காட்டிக்கொண்டிருக்கிறது. கொமோரா புரிந்துகொள்ளப்படவேண்டிய உதிரிகளின் வன்மத்தையே பேசுகிறது.

–அகரமுதல்வன்

கொமோரா - லக்ஷ்மி சரவணக்குமார்

கிழக்கு பதிப்பகம்