
வீரமும் காதலும்.
வெண்முரசு நாவலின் நாயகனாக அனைத்தையும் நிகழ்த்துபவன் இளைய யாதவன். ஆனால், அதன் காவிய நாயகன் கர்ணன். வெண்முரசில் மிகவும் உயரமானவன் அவனே. ஆனால் அந்த கர்ணன் ஓரிடத்தில் தனக்கு வாய்க்காதது அர்ஜுனனின் பற்றற்ற தன்மை என்கிறான். கர்ணன் அர்ஜுனன் இருவரில் கர்ணன் மீது பெரும் கருணையும் ஆனால் அர்ஜுனன் மீது பெண் பித்தன் என்ற என்ணமும் மக்களிடம் உண்டு. ஆனால் உண்மையில் மகாபாரத போரில் ஒரு யோகியாக போர் புரிந்தவன் அர்ஜுனன் ஒருவனே. விழைவின் கடவுளான இந்திரனின் மகனாக, ராமாயணத்தில் வருபவன் வாலி. அவன் ராமன் கையால் இறக்கிறான். ஆனால், மகாபாரதத்தில்வரும் இந்திர மைந்தனான அர்ஜுனன் யோகியாக கீதோபதேசம் பெறுகிறான். அதை நோக்கிய அவனின் இரு பயணங்கள் வெண்முரசில் நாவலாக வந்திருக்கின்றன. முதலாவது, சூதாட்டத்திற்கு முன் இந்திரப்ரஸ்தம் கட்டியெழுப்பப்படும் தருணத்தில் நிகழும் காண்டீபம். இரண்டாவது வனவாசத்தில் பாசுபதம் பெறுவதோடு நிறைவடையும் கிராதம்.
இதில் காண்டீபம் அவன் வீரத்தை முழுமையாக முன்னிறுத்துகிறது. அவன் நால்வரை மணக்கிறான். திரெளபதி தவிர, மற்றவர்களான நாகர்களின் இளவரசி உலூபியையும், மணிப்பூர இளவரசி சித்ராங்கதையையும் யாதவ இளவரசி சுபத்ரையையும் மணக்கும் தருணங்கள் இந்த நாவலில் நிகழ்கின்றன. அவனின் ஒவ்வொரு மனைவியும் அவனால் வென்றெடுக்கப்பட்டவர்கள். அதில் நாகர்களோடு போர் புரிவதும் பல்குணையாக அவன் சென்று மணிப்பூரத்தைக் காப்பதும் சுபத்ரையை தேரில் அழைத்து வருவதும் ஒரு சாகச நாவலுக்குரியவை. ஒரு சிறுவனுக்கு கதை சொல்லும் வழியாக விரியும் இந்த நாவல் ஒரு கதாநாயகனுக்குரிய அத்துணை சாகசங்களும் வீரமும் காதலும் நிரம்பியது.
அர்ஜுனனின் பயணங்கள் அனைத்தும் தன் எல்லைகளைக்கடந்து தன்னைக் கண்டடைதலே என்று ஜெயமோகன் கூறுகிறார். சித்ரரதன் என்ற கந்தர்வனை அவன் போரில் வீழ்த்தும் தருணத்தில் துவங்கும் நாவல் இறுதியில் காண்டீபத்தை தன் மைந்தர்களுக்கு நிகழ்த்திக்காட்டும் வீரத்தோடு நிறைவடைகிறது. இதனிடையே அவன் அகிம்சையை உணரும்படி அரிஷ்டநேமியின் அருகநெறியும் இழைந்து வருகிறது. இறுதியில் சுபத்ரையை வென்று தேரில் இட்டு வருகையில் அவன் யாரையும் கொல்வதில்லை. அவ்வகையில் அர்ஜுனனின் வீரத்தையும் நேமிநாதரின் மகாவீரத்தையும் ஒருசேர கூறும் நாவல் காண்டீபம்.
-காளி பிரசாத்.
காண்டீபம்- ஜெயமோகன்,
கிழக்கு பதிப்பகம்.