
நகர வாழ்நிலை
பட்டம்விடும் நூல் உருண்டைகள் சிக்கிக் கொண்டதை சிறுவன்,‘கோச்சர் காச்சர் ஆயிருச்சு’, என்கிறான். நகரவாழ்வின் இத்தகு சிக்கல்களைப் பேசும் கன்னட நாவலே ‘காச்சர் கோச்சர் ’! இதை எழுதிய பொறியியலாளர் விவேக் ஷான்பாக். யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் மருமகன். புதுமையையும் எளிமையையும் குழைத்து எழுதியிருக்கிறார்.
பெங்களூரின் பழைய காப்பி ஹௌஸ் கம் பாரில் கதை துவங்குகிறது. சோம்பேறி யான பணக்கார இளைஞனே கதை சொல்லி. முதல் காட்சியிலேயே ஓர் இளம்பெண் கோபத்தில் தண்ணீர் கிளாஸையெடுத்துத் தன் நண்பன் மீது வீசியெறியப், பளீரென உடைகிறது. உணர்ச்சிகளைப் பிழியாத இதுபோன்ற சமகால நிகழ்வுகள் சுவாரசியமானவை. அங்கதத்திற்கும் பஞ்சமில்லை.‘அங்குமிங்கும் காதல் செய்ய முயன்றாலும் ஒரு அடி கூட முன்னேற முடியவில்லை.’ ‘எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் வெடிமருந்தைப் போலிருப்பவள்’ போன்ற வரிகள்.
தமிழில் மொழிபெயர்த்திருக்கும் நல்லதம்பிக்குத் தமிழ், கன்னடம்-இரண்டிலும் புலமையிருப்பது சரளத்தில் தெரிகிறது. சின்னச் சின்ன வாக்கியங்களில் கதையை விறுவிறுப்பாக நகத்திச் செல்கிறார். ஒரு மொழிபெயர்ப்பைப் படிக்கும் உணர்வே தோன்றவில்லை. இவர் ஏற்கெனவே ‘ஒரு புளியமரத்தின் கதை’யையும் ‘மாதொரு பாகனை’யும் கன்னடத்திற்குக் கடத்தியவர். பிரச்சாரமற்ற தொனி; கடினங்களை இயல்பாகக் கடக்கும் சுதந்திர நடை. தொண்ணூறே பக்கங்களில் ஆட்டங்காணாத பாத்திரப் படைப்புகளை உருவாக்கி இருக்கிறார் எழுத்தாளர்!
காச்சர் கோச்சர், விவேக் ஷான்பாக்,
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி லிட், 669, கேபி சாலை, நாகர்கோவில் 629001.