சங்கப்பெண் கவிதைகள்

அன்றும் இன்றும்

சங்க கால பெண்பாற் புலவர்களையும் நவீனகால பெண் கவிஞர்களையும் இணைத்துப்பார்த்து  மிகச்சிறப்பான ரசவாதத்தை இந்நூலில் நிகழ்த்தியிருக்கிறார் சக்திஜோதி. காவற்பெண்டு என்கிற பெண் புலவரிடம் உன் மகன் எங்கே என்று கேட்கிறார்கள். போருக்கு அழைத்துச் செல்ல வந்த அழைப்பு அது. அவர் சொல்கிறார்: புலி தங்கிச் சென்ற குகைபோல் அவனைப் பெற்ற வயிறு இங்கே இருக்கிறது. போர்க்களத்தில் அவன் தானாகவே வந்து நிற்பான்! பெண்ணுக்கு காதல் மட்டுமல்ல உரித்தானது, வீரமும்தான்! தன்  தந்தையும், கணவனும் இறந்த பிறகு சின்னஞ்சிறு மகனுக்கு வெள்ளாடை உடுத்தி வேல் தந்து போருக்கு அனுப்பும் பெண்ணைப் பாடுவது ஒக்கூர் மாசாத்தியார் என்கிற பெண் புலவரே. தன் மகன் புறமுதுகிட்டான் எனக் கேட்டு தன் மார்பை அறுத்தெரியத் துடித்து வாளுடன் களம் தேடிச் செல்லும் பெண்ணைப் பாடுவதும் காக்கைப் பாடினியார் என்கிற பெண் தான். இவர்களின் உணர்வுகளுடன் சுகந்தி சுப்ரமணியம், மாலதி மைத்ரி ஆகிய இரு நவீன கவிஞர்களின் கவிதைகளைப் பொருத்திப் பார்த்து சக்திஜோதி, பெண்ணுக்கு தன் உடல் பற்றிய பெருமித உணர்வு இருக்கிறது. இந்த உலகையே தான் பெற்றுக்கொடுத்திருப்பாக உணர்வதாகச் சொல்கிறார். நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே, எனத்தொடங்கும் காமம்சேர் குளத்தார் என்ற புலவரின் பாடலைத் தொட்டு, ஒரு பெண் நெகிழ்ந்து கண்ணீர் பெருக்கும் கணங்கள் நிறைய என்கிற இவர் இங்கே  லதா மற்றும் கவிதா முரளிதரனின் கவிதைகளை இடம்பெறச் செய்து பெண்ணின் நெகிழ்வான பக்கத்தை அலசுகிறார். பெரும்பாலும் அனைத்து நவீன பெண்கவிஞர்களும் இந்நூலில் இடம் பெறுகிறார்கள்.

சங்கப்பெண் கவிதைகள், சக்தி ஜோதி, சந்தியா பதிப்பகம், 77, 53-வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83