அவள் - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

பெண்ணியப் பார்வையில்

ஆணை முன்னிறுத்திப் பெண்ணை அடுத்த நிலையில் வைக்கிற தத்துவ போதனைகள் ஆகப்பெரும்பாலான மதங்களில் இருப்பது பற்றிப் பேசுகிறபோது இஸ்லாம் சமூக அன்பர்கள் தங்கள் சமயத்தில் அப்படியில்லை, நடைமுறையில் ஆண்கள் மார்க்க விதிகளை மீறிவிட்டது உண்மையே என்பார்கள். இஸ்லாமிய நிறுவன ட்ரஸ்ட் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் எழுதியுள்ள ‘அவள் – பெண்ணியப் பார்வையில்’ உரையாடலுக்கான நூலாகும்.

பல்வேறு சமயங்களில் உள்ள பெண்களைச் சிறுமைப்படுத்தும் போதனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நபிகள் காலத்தில் பெண்களுக்கு அரசியல் முதல் ஆன்மீகம் வரையில் சமத்துவ உரிமைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் நிகழ்ந்துள்ள மாற்றம் இந்தியாவில் இன்னும் வரவில்லை என்று ஒப்புக்கொள்கிறார் நூலாசிரியர்.

பெண்களின் பாதுகாப்புக்காகத்தான் கட்டுப்பாடுகள் என்ற வாதத்தை எதிரொலிக்கும் இப்புத்தகம், பெண்ணை ஆணின் உடைமைப் பொருளாக்கிய வரலாற்றுக் கட்டத்திற்குள் பயணிக்கவில்லை.

பாலின சமத்துவத்துக்காகக் களம் கண்ட இயக்கங்கள் பற்றிய பகுதி முக்கியமானது. ஆனால், பெண்ணியவாதிகளின் பரப்புரைகள் பற்றிய ஒரு தரப்பான விமர்சனங்களே முன்வைக்கப்பட்டுள்ளன. உடலுறவு சார்ந்தே கட்டமைக்கப்பட்டுள்ள கோட்பாடுகளையே டாக்டரும் எதிரொலிக்கிறார். தற்பாலின ஈர்ப்பு பற்றிய புரிதலும் அவ்வாறே. விரிவான விவாதத்திற்கான ஒரு கருப்பொருளை, ஒற்றைப் பத்தியில் சொல்வது, பழைய கட்டமைப்பு குலைந்துவிடுமோ என்ற மிகை அச்சத்திலிருந்து வருகிறது.

பெண்ணின் ஆடைத் தேர்வு பற்றிய கருத்துகளும், அதன் பின்னணியில் உள்ள ஆணாதிக்கச் சமூக உளவியல் பற்றிப் பேசவில்லை.

ஆயினும் இத்தகைய ஆரோக்கியமான வாதங்களுக்கு இட்டுச் செல்கிற வகையில் மட்டுமல்லாமல், “சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் ஓர் இனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஒடுக்கிவைத்துவிட்டு ஒரு சமூகம் முன்னேற முடியாது” என முடித்திருக்கிற வகையிலும் இந்தப் புத்தகம் வாசிக்கப்பட வேண்டியது.

-அ.குமரேசன்

 அவள் – டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்,

138, பெரம்பூர் நெடுஞ்சாலை,

சென்னை – 600 012.