கடவுள் தொடங்கிய இடம்

ஈழ தமிழ் இளைஞன் ஒருவனின் புகலிடம் தேடிச் செல்லும் பயண அனுபவத்தை விவரிக்கிறது. அ.முத்துலிங்கம் எழுதி இருக்கும் கடவுள் தொடங்கிய இடம். ஈழ எழுத்தாளர்களில் ‘சூப்பர் ஸ்டாரான’ அ.மு. எழுத்தில் விகடனில் தொடராக வந்தது இது. நிஷாந் என்ற இளைஞரை கொழும்புவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றிவிடுகிறார்கள். அங்கிருந்து உக்ரைன் சென்று அங்கே ஒரு இடத்தில் ஏஜெண்ட் அவனையும் உடன்வந்தவர்களையும் அடைத்துவைத்திருக்கிறார். தக்க சமயம் வரும்போது அவர்களை எல்லைதாண்டி  கொண்டுபோய் விடுவார். போலந்து வழியாக ஜெர்மனி. அல்லது ஸ்லோவாக்கியா வழியாக பெல்ஜியம். பின்னர் ஜெர்மனி. அல்லது ஏதாவொரு நாடு. எல்லை தாண்டுபோது சிலர் பிடிபட்டு அடி உதை வாங்கித்  திரும்பிவருவார்கள். நிஷாந் சில ஆண்டுகள் உக்ரைனிலேயே காத்திருந்து, ஜெர்மனி வந்து, அங்கிருந்து கனடா சென்றடையும் வரை அவன் சந்திக்கும் ஆட்கள், ஏஜெண்டுகள், நிகழ்வுகள், மொழிப்பிரச்னை, காதல் என்று சுவாரசியமாகச் செல்லும் இந்நாவலில் அ.முவுக்கே உரித்தான அனுபவத்தகவல்கள் உதிர்ந்துகொண்டே இருக்கின்றன. ஈழத்து சாதிய கட்டமைப்பையும் சுமந்து வரும் மனிதர்களின் சுபாவங்களும் இந்நாவலில் பதிவாகின்றன. இந்நாவலில் வரும் ஒவ்வொரு மனிதருக்கு ஒவ்வொரு கதை உண்டு. புலம்பெயர்வதன் துன்பியல் அனுபவங்களே இலக்கியமாக மாறுகின்றன இந்த இரு நூல்களிலும்.