ஊழல் உளவு அரசியல்

சவுக்கின் கதை!

தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியராகப் பணிபுரிந்த சங்கர், ஊழல் எதிர்ப்புக்காக அனைவராலும் அறியப்பட்டவர். முந்தைய திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உபாத்யாயா என்பவருக்கும் தலைமைச்செயலாளர் திரிபாதி என்பவருக்கும் இடையில் நடந்த உரையாடல் செய்தித்தாள்களில் வெளியானது.  இவற்றை வெளியிட்ட பழி அந்த துறையில் பணியாற்றிய தன் மீது விழுந்ததும் அதனால் தான் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்ததும் பின்னர் வழக்கில் வாதாடி வென்றிருப்பதும் வரையிலான அனுபவங்களை சங்கர் நூலாக எழுதி உள்ளார். ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கினாலும் போகப்போக விறுவிறுப்பாகவும் மனதைப் பிசையும் அனுபவங்களுடன் செல்கிறது இந்த நூல். முதன்முதலாகச் சிறைக்குள் செல்லும் சங்கர் அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து அஞ்சுகிறார். அவரை அடைக்கும் அறையில் இருந்த இரண்டு பேரின் தோற்றத்தைப் பார்த்ததும் அவர்கள் தன்னை என்ன செய்வார்களோ என்று எண்ணி, இந்த அறை வேண்டாம் என்கிறார். ஆனால் காவலர்களோ உள்ளே தள்ளிப் பூட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் வழிப்பறிக் குற்றவாளிகள். இரவு உணவை அவர்கள்தான் சங்கருக்குத் தருகிறார்கள். ஒருவன் அவருக்கு பீடி புகைக்கத் தருகிறான். அவர்கள் அறை மாறிச் செல்லும்போது ஒருவன் மேலும்  ஐந்து பீடிகட்டுக் களைத் தந்துவிட்டுச் செல்கிறான்.  சங்கரின் அனுபவங்களில் இந்நூலில் இடம்பெற்றிருப்பது குறைவுதான். அவர் இறுதியாகச் சொல்கிறார்:  “காலச்சக்கரத்தை பின்னோக்கிச் சுழற்றினால் நான் இதை மீண்டும் செய்வேனா என்றால் நிச்சயம் செய்வேன்!”

ஊழல் உளவு அரசியல்- அதிகார வர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம், சவுக்கு சங்கர், வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் கட்டடம், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை,  சென்னை -14,