கேசம்

அறியப்படாத கதைக்களன்:

நரன் கவிஞராக பரவலான வாசிப்பு கவனம் பெற்றவர். அவரின் முதல் சிறுகதை தொகுப்பு கேசம். மொத்தம் பதினோரு புனை கதைகள். சரளமும் தீவிரமும் கொண்ட புனைகதை மொழி நரனுடையது. கதை மாந்தர்களிடையே நடக்கும் சாதாரண சம்பவங்கள் அல்லது உரையாடல்கள் கூட நரனின் கவித்துவமானதொரு மயக்கும் மொழியில் அசாதாரண அர்த்தம் கொண்டுவிடுகின்றன. கதைகளை சொல்லத் தேர்ந்தெடுத்த பூடகமும் கவித்துவமும் பின்னிப் பிணைந்த மொழி இந்தக் கதைத் தொகுப்பை கவனிப்புக்குள்ளாக்குகிறது. கதைகள் நிகழும் நிலப்பரப்பு, கதைகளின் சம்பவங்கள் நமக்கு அளிக்கும் நேரிடையான அர்த்தத்திற்கு அப்பாலான இன்னொரு கோணத்தில் விரியும் அர்த்தத் தளம் ஆகியவை மொழியின் பாய்ச்சலோடு சொல்லப்பட்ட இந்தக் கதைகளை முக்கியமானதொன்றாக்குகின்றன. கடந்த கால வாழ்வின் அனுபவங்கள் நரனால் கதையாக மீள கூறப்படும்போது ஒருவித அசாதாரணத்தன்மையும் அமானுஷயமும் கூடிய கதைகளாக நம்மை வந்தடைகின்றன. வளமான  தமிழ் மொழியின்  ரஸவாதம் இது. திகட்டாத கதைக்களன்கள் அல்லது அதிகம் சொல்லப்படாத கதைக்களன்கள் வாசிப்பின் தீவிரத்தைக் கூட்ட முயற்சிக்கின்றன. வலிமிகுந்த அனுபவங்கள் மொழியின் கூர்மையோடும் வன்மையோடும் புனைகதைகளாக்கப்பட்டுள்ளன.  பெண் காது, கேசம், மரிய புஷ்பத்தின் சைக்கிள், செவ்வக வடிவ பெண்கள் என பெரும்பாலும் பெண்களை மையமிட்ட கதைகள் நிறைந்த தொகுப்பு என்ற அளவிலும் முக்கியமான தொகுப்புதான் இது. நரனின் இந்தத் தொகுப்பு ஒரு காத்திரமான புது வரவு என்று சர்வ நிச்சயமாகச் சொல்லமுடியும்.

கேசம்: நரன்,

சால்ட் வெளியீடு, 115, எம்.ஏ.எஸ். ரெசிடென்ஸி அபார்ட்மெண்ட்ஸ், எஸ் 3, இரண்டாவது தளம், கோடம்பாக்கம். சென்னை - 24.