தப்புக்கடல

பெரும்பாலும் கிராமங்களைச் சேர்ந்த எளிய விளிம்பு நிலை மக்களைக் கொண்ட சிறுகதைகள் இடம்பெற்றிருக்கும் தொகுப்பு. கருணாகரன் தன் கிராமிய வாழ்க்கை நினைவுகளை அச்சு அசலான மனிதர்களாகப் பதிவு செய்திருக்கிறார். அவரது வாழ்வின் அச்சு இவற்றில் பதிந்திருப்பதால் உயிர்ப்புடன் இருக்கின்றன இக்கதைகள். குறிப்பிட்டுச் சொல்வதென்றால் கிராமத்தானின் டைரிக் குறிப்புகள் என்ற கதையைச் சொல்லலாம். அழகான குறும்படத்துக்கான கதை. தந்தையின் தொழிலான சவரக்கத்தியை எடுக்க மறுக்கும் சிறுவன், நகரத்தில் படிப்புச் செலவுக்காக சலூனில் வேலை செய்கிறான். அதைப் பார்த்து வருத்தப்படும் தந்தையிடம் அவன் சொல்லும் வார்த்தைகள் இன்றைய இளைய தலைமுறைக்கு சிறந்த பாடம். தப்புக்கடல என்ற கதையை தமிழகத்தின் நடுப்பகுதியைச் சேர்ந்த வாசகர்கள் நெருக்கமாக உணர்வார்கள். அதுபோலத்தான் கருப்பந்தட்டை கதையும். ஆனால் மானுட உணர்ச்சிகள் பொதுவானவை என்பதால் இதில் வரும் மிராசுதார் மற்றும் ஒரு தாயாரின் உணர்வுகளை உலகமே புரிந்துகொள்ள முடியும். இதுபோன்ற பல கதைகள் அடங்கிய சிறப்பான தொகுப்பு இது.

தப்புக்கடல, பெ.கருணாகரன், குன்றம் பதிப்பகம்,73/31, பிருந்தாவன் தெரு, மேற்கு மாம்பலம்,

சென்னை 600033