செல்லாத பணம்

மானுடத்தின் குரல்:

உறவுகளை, நட்புகளை, சமூகத்தை பணத்தைக் கொண்டே மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் நாம். அந்த பணம் சில நேரங்களில் செல்லாத பணமாக, எந்த மதிப்புமற்ற வெற்றுக் காகிதமாக ஆகிவிடும் தருணங்களை தொட்டுக் காண்பித்திருக்கிறார் எழுத்தாளர் இமையம். முதல் வரியிலேயே கதையைத் தொடங்கி விடும் இந்த நாவல் புதை குழி போல  ஆழமாய் சரக்கென்று நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. பொறியியல் படித்த ரேவதிக்கு ஆட்டோ ஓட்டும் ரவியை ஏன் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரிவதில்லை. இந்தக் காதலும், திருமணமும் அதற்குப் பிறகான தீக்குளிப்பும் நம்மைச் சுற்றி தினமும் நடந்து கொண்டிருப்பவை. ஆனால் அவற்றை இமையத்தின் வரிகளில் படிக்கும் போது சில சமயங்களில் புத்தகத்தை பிடித்திருக்கும் கை நடுங்குகிறது, பல சமயங்களில் கண்களில் திரளும் கண்ணீர் தொடர்ந்து படிக்க விடாமல் செய்கிறது. காதலை புனிதப்படுத்தவும் செய்யாமல், இகழவும் செய்யாமல் இப்படித்தான் நாட்டில் நடக்கிறது என்று கதையைச் சொல்லி எழுத்தாளரும் வாசகரைப் போல தள்ளி நின்று கொள்கிறார். மனதில் எழும் எந்தக் கேள்வியையும் எழுத்தாளரிடம் கேட்க முடியாது. சமூகத்திடம்தான் கேட்க வேண்டும்.

மருத்துவமனையின் வாசம் நம்முடைய மூளையில் உறையும் நேரத்தில், தன்னுடைய ஆடுகளை விற்கும்போது அவை கதறி வீறிடும் நேரத்தில் தான் பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததால்தான் தன்னுடைய பெண் தீயில் விழுந்திருக்கிறாள் என்ற மலரின் அழுகை, கதையிலிருந்து மேலெழும்பி மானுடத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்குகிறது.  நிகழ்வுகளை தகப்பனின் பார்வையில் இருந்து அணுகியிருக்கும் ஆசிரியர் காதலுக்குப் பின்னுள்ள  சாதிய வேறுபாட்டையும் உணர்த்தத் தவறவில்லை.  சோத்துல என்ன சாவு சோறு , கல்யாண சோறுன்னு, எல்லாம் ஒன்னுதான்என்ற வரிகள், நாவலின் தரிசனத்தை நமக்கு அளித்துவிடுகின்றன.

 

செல்லாத பணம், இமையம்,  வெளியீடு: க்ரியா, 2/25, 17 வது கிழக்குத்தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை-41