காடறியாது பூக்கும் மலர்

பீர்க்கம் பூவின் நிறம்

முன்னுரையிலேயே கலாப்ரியா  சொல்லியிருப்பதுபோல்  முதிர்ச்சியான வரிகள் கொண்டவை இக்கவிதைகள். காடறியாது பூக்கும் மலர் என்ற இத்தொகுப்பின் தலைப்பே ஒரு  சிறப்பான கவித் தருணத்துக்கு அழைப்பு விடுக்கிறது. முயற்செவியொத்த மலைக்குன்று, புள்ளிகளாலான சிறுவண்டின் நகர்தல், வெண்ணிற்ச் சுவையுடன் மீதேறும் அனல் என ஒரே கவிதையில் அழகான வரிகள் சுடர்விடுகின்றன.  பீர்க்கம் பூவின் நிறமாகும் இவ்விரவு என்ற ஒரு வரியே வாசக மனத்தைத் துளைத்தெடுக்கப் போதுமானது. தொகுப்பு முழுவதுமே இப்படிப்பட்ட அழகான வரிகளை எழுதிச் சென்றிருக்கிறார் ரோஸ்லின். இயற்கையின் வாசனையை புதிய மொழியில், பசுமையான அனுபவங்களாகக்கடத்தும் கவிதைகள். கவனிக்கப்பட வேண்டிய தொகுப்பு. 

காடறியாது பூக்கும் மலர்  அ.ரோஸ்லின், வெளியீடு: புனைவு,  27 ஏ, ஜவஹர் 3வது தெரு, திருமங்கலம் 625706