
கனவு வரிகள்:
கனவுத் தொழிற்சாலைக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞரான ராஜா சந்திரசேகரின் இந்த புதிய கவிதைத் தொகுப்பு புன்னகைக்க வைக்கும் வரிகளால் புனையப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்குள் எங்காவது நான் தென்பட்டால் புன்னகை செய்யுங்கள், போதும் என்று ஆரம்பத்திலேயே கேட்கிறார் கவிஞர். முழுக்க புன்னகைத்துக்கொண்டேதான் இந்தத் தொகுப்பைப் புரட்டவேண்டியிருக்கிறது.
‘பாறை நான்
உடைபட
அன்பின் பூவொன்றை
மேல் வை- இந்தக் கவிதை பலநாட்கள் நினைவில் நிற்கக்கூடிய வரிதான். அன்பால் உடைக்கமுடியாத பாறை என்று ஏதேனும் இருக்கமுடியுமா?
எல்லோரிடமும் தப்பித்து வந்து என்னிடம் மாட்டிக்கொண்டேன் என்கிறார் இன்னொரு இடத்தில். காதல், தத்துவம், ஆன்மீகம், வாழ்க்கையின் அவலம், பயணங்கள், பூக்கள், நீர் என ராஜா சந்திரசேகரின் இத்தொகுப்பு முழுக்க வேறுபட்ட அனுபவங்கள். ஆனால் அவற்றைத் தன் மாறுபட்ட கவிமனம் கொண்டு பார்ப்பதன் மூலமாக அற்புதமான கவிதைத் தருணங்களாக மாற்றிக்காட்டும் ரசவாதத்தை நிகழ்த்திக் காட்டுகிறார். திரும்பத் திரும்ப வாசிக்கச் செய்யும் வரிகளை எழுதுவதே நவீன கவிஞனின் சவால். அப்படி நிறைய வரிகளை இந்நூலில் காணமுடிகிறது.
மீனுக்கு நீரெல்லாம் பாதைகள், ராஜா சந்திரசேகர், சந்தியா பதிப்பகம், எண் 77, 53வது தெரு, அசோக் நகர் சென்னை83