வெண்முரசு

அழுத கண்ணீர்:

வெண்முரசு என்ற பெயரில் ஜெயமோகன் எழுதிவரும் மகாபாரத நாவல் தொடரின் தொடக்க நாவல் முதற்கனல். மகாபாரதம் என்ற கதை உருவாவதற்குக் காரணமான முதல் கண்ணீர்த் துளியை விரிவாகப் பேசுகிறது. அது காசி இளவரசி அம்பையின் கண்ணீர். யாருமே ஏற்க விரும்பாத நிலைக்குத் தள்ளப்பட்ட அவள், பீஷ்மரை அழிப்பதற்காகப் பெருவஞ்சம் கொண்டு தீப்பாய்கிறாள். முன்னதாக அவளொரு பிச்சியாக அலைந்தபோது அவளோடு ஒட்டி வளர்கிறது சிகண்டினி என்ற பெண் குழந்தை. அதுவே பின்னர் சிகண்டியாக பால் மாறுதல்கொண்டு அம்பையின் வஞ்சத்தைத் தீர்ப்பதற்காக பீஷ்மரைக் கொல்லத் துடிக்கிறது.  அஸ்திர வித்தைக்காக குரு அக்னிவேசரிடம் சேர்ந்து பின்னர் அங்கிருந்து பீஷ்மரைக் கொல்ல மேலும் வித்தைகளைக் கற்க அலைகிறான் சிகண்டி. விரிந்த பாலைவனம் ஒன்றில் பீஷ்மரையும் சந்திக்கிறான். பீஷ்மர் அவனைத் தன் கொலையாளி என அறிந்துகொள்கிறார். சிகண்டி தன்னை அறியாதிருக்க முகத்தை மூடிக்கொள்ளும் அவர் அவனுக்கு தானறிந்த எல்லா வித்தைகளையும் கற்பிக்கும் அத்தருணம் இந்த நாவலின் உச்சகட்ட தருணங்களில் ஒன்று! மகாபாரத்தில் கோட்டுச் சித்திரங்களென வந்துபோகும் பெயர்களை இந்நாவலில் ரத்தமும் சதையுமாக உலவ விட்டிருக்கிறார் ஜெயமோகன். எதார்த்தமும் புராணிகமும் அருகருகே இருகோடுகளாகச் செல்லும்வகையில் தான் இந்த முழு நாவல் வரிசையையும்  அவர் எழுதுகிறார். அம்பையின் பாத்திர உருவாக்கலில் அதன் தொடக்கத்தை நாம் உணரமுடியும். வராக ரூபினியாக  கோட்டைகளின் வாயில் தோறும் அமரும் அம்பை அஸ்தினபுரத்திலும் கோவிலில் குடிகொண்டு தன் பழிக்காகக் காத்திருக்கிறாள்!  மகாபாரத நாவல் வரிசையின் தோரணவாயிலான முதற்கனல் அட்டகாசமாக அமைந்திருக்கிறது!

வெண்முரசு -முதற்கனல்,ஜெயமோகன்,  வெளியீடு கிழக்கு பதிப்பகம்,  177/103, முதல் தளம்,  அம்பாள் கட்டடம்,லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை. சென்னை -14