ஆண் பிரதியும் பெண் பிரதியும்

விரிவடையும் எல்லைகள்:

ஆண் பிரதியும் பெண் பிரதியும்கவிஞர் சமயவேலின் முதல் கட்டுரைத் தொகுப்பு. அதிகமும் கவிதை, சிறுகதை, நாவல் என படைப்பிலக்கியம் பற்றிய 26 விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. கூடுதலாய் இரண்டு அஞ்சலிக் கட்டுரைகளும் உண்டு.  வாசிப்பும், தொடர்ந்த வாசிப்பு தரும் ருசியும் விமர்சனக் கட்டுரைகளாக நூலெங்கும் விரவிக்கிடக்கின்றன. இந்தத் தொகுப்பை புதிதாக வாசிக்கும் ஒருவன் இதில் கூறப்பட்டுள்ள படைப்புகளைப் பற்றிய அசலான சித்திரத்தை முற்றிலும் ஒரு புதியதொரு  கோணத்தில் அறியமுடியும் என்பது இந்தத் தொகுப்பின் சிறப்பு. விக்கிரமாதித்யன், சி.மோகன், பெருந்தேவி, லீனா மணிமேகலை, வெய்யில், அய்யப்ப மாதவன், சாகிப்ரான், அ.ரோஸ்லின் என நவீன கவிஞர்களின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள் உள்ளன. சமகால மற்றும் தனக்கு அடுத்து  எழுத வந்த கவிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் கவனத்துடனும், அக்கறையுடனும், படைப்புக் கூர்மையுடனும் அணுகும் விமர்சனப் பார்வை கவிஞர் சமயவேலுடையது. இன்னொரு பகுதியான நாவல் மற்றும் சிறுகதைகள் குறித்த கட்டுரைகளில் ந.முத்துசாமியின் மேற்கத்திக் கொம்பு மாடுகள் மற்றும் கொரிய நாவலான ‘தி வெஜிடேரியன்பற்றிய கட்டுரைகள் இரண்டும் முக்கியமானதெனச் சொல்லலாம்.  படைப்பிலக்கியம் குறித்த வாசிப்பின் எல்லைகளை விரிவாக்கிக்கொள்ள உதவும் கட்டுரை நூல்.

 

ஆண் பிரதியும் பெண் பிரதியும் --- சமயவேல்,

வெளியீடு: மணல்வீடு இலக்கிய வட்டம், ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் – 636 453