மாயாஜாலமான மணவாழ்க்கை

மணவாழ்க்கை மகிழ்ச்சியாய் அமைய தமிழில் விரிவாய் எழுதப்பட்ட முதல்நூல் இதுவாகத்தானிருக்கும். நூலாசிரியர் நாகலட்சுமி சண்முகம் ஏராளமான நூல்களை தமிழில் மொழி பெயர்த்தவர். இது அவரது சொந்தப்படைப்பு. வற்றாத காதல், பரஸ்பர மரியாதை, ஈருடல் ஓருயிர், அசைக்க முடியாத நம்பிக்கை, அக்கறை மிக்க புரிந்துணர்வு, நாணமறியா அன்னியோன்யம், முழுமையான அர்ப்பணிப்பு என்ற ஏழு ரகசியங்கள் மணவாழ்க்கையை மாயாஜாலமாக மாற்றும் என்கிறார்.

புத்தகம் படிக்கும் பழக்கமில்லாத தன்னை புத்தகம் படிக்க வைத்து இன்றைக்கு இதுபோல் நூலொன்றைப் படைக்க வைக்கக் காரணமாயிருந்தவர் தன் கணவர் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இவ்வளவு 
சிறப்புகள் தன்னை வந்தடைய காரணமாக இருந்தவர் தன் கணவர் என்றும் நல்லதொரு வழிகாட்டியாக கணவரைப் பெற்றிருப்பதற்குப் பெருமை கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.

ஆச்சரியங்கள் உங்கள் மணவாழ்க்கையை எப்போதும் சுவாரசியமாக வைத்திருக்கும் என்று கூறும் நூலாசிரியர் தன் கணவர் ஒரு நாள் திடீரென்று தன் அலுவலகத்துக்கு மலர்க்கொத்து ஒன்றை, ""என் இனிய காதல் மனைவிக்கு, உன்னைக் காணாமல் நான் வாடுகிறேன். மாலையில் சீக்கிரம் வந்து விடு... உன் காதல் கணவன்'' என்று குறிப்பிட்டு அனுப்பியதை நினைவுகூர்கிறார். அதுவும் திருமணமாகி பதிமூன்று ஆண்டுகள் ஆனபிறகு. அதை நினைத்தால் இன்றும் தன்னுள் புன்னகை மலர்வதையும் எழுதியிருப்பதைப் படிக்கும்போது நமக்குள்ளும் புன்னகை மலர்கிறது. 
பெற்றோர்கள் பொருளாதாரப் பாதுகாப்பை வலியுறுத்துவது போன்று மகிழ்ச்சியான மண வாழ்க்கையைப் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துரைப்பதில்லை என்ற ஆழமான, நமக்கு இதுவரை புலப்படாத உண்மையை எடுத்துரைக்கிறார்.

- மு.செந்தமிழ்ச்செல்வன்

மாயாஜாலமான மணவாழ்க்கை, நாகலட்சுமி சண்முகம், எம்பஸி புக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், 120, க்ரேட் வெஸ்டர்ன் பில்டிங், மகாராஷ்ட்ரா சேம்பர் ஆப் காமர்ஸ் லேன், போர்ட், மும்பை 400023.