தமிழ் திரைப்படத்தின் நூற்றாண்டு - 2018

தமிழில் திரைப்படம் உருவாகி நூற்றாண்டை கடக்கும் நிலையில், இதன் நூற்றாண்டைக் குறிப்பாக, எந்த ஆண்டில் கொண்டாடுவது என்பது குறித்து கேள்வி எழுப்பி,  தமிழ் திரைப்படத்தின் நூற்றாண்டு -2018  என்று  சொல்கிறார்  இந்த நூலில்  பெ. வேல்முருகன்.  தமிழில் முதன்முதலாக திரைப்படத் தயாரிப்பை ஆரம்பித்த நடராஜ முதலியாரின் “கீசகவதம்” வெளியான ஆண்டு 2016 என அவர் பேட்டியளித்த சில பத்திரிகைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 2016 ஆம் வருடம் தான் தமிழ்த் திரைப்படத்தின் நூற்றாண்டு என்று சிலர் வாதிட்டனர்.  அந்த ஆண்டும் நூற்றாண்டாகக் கொண்டாடப்பட்டது.

 தி இந்து ஆங்கில நாளிதழில் 1936 டிசம்பரில்  நடராஜ முதலியார் கூறிய செய்தியில், அவர் 1916-ல் பூனேவில் திரைப்படத் தொழில்நுட்பங்களைக் கற்றதாகவும் 1917-ல் சென்னையில் இந்தியன் பிலிம் கம்பெனி என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தனது முதல் திரைப்படமான கீசகவதம் படத்தை தயாரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

 இவர் பற்றி அதே நாளிதழில் டி.எம் ராமசந்திரன் என்பவர் 1964-ல் எழுதிய பேட்டிக் கட்டுரையில் “சென்னையில் தயாரிக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் மௌனப்படமாக ‘கீசகவதம்’ 1918ஆம் ஆண்டு சென்னையில் இரண்டு வாரம் திரையிடப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த  இரண்டு ஆவணங்களையும் வெளியிட்டு இவர் 2018 தான் தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு என்கிறார்.

  மேலும் இந்தியாவில் முதல் திரைப்படம், தமிழ் பேசிய முதல் திரைப்படம், மலையாளத் திரையுலகுக்கு வித்திட்ட தமிழர்கள், சினிமா சம்பந்தமாக சட்டங்கள் போன்ற தலைப்புகளிலும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியர் தமிழக அரசின் திரைப்படக்கல்லூரி ஆசிரியர். 

ஆசிரியர் : பெ.வேல்முருகன், ஒளிக்கற்றை  வெளியீட்டகம்,  9/2 காஞ்சிரம் பொற்றை, பனங்காலை, களியக்காவிளை,  கன்னியாகுமரி மாவட்டம் 629153