1975,இரா.முருகன், கிழக்கு பதிப்பகம்

அவசர நிலையின் நிழலில்

1975 எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஆண்டு. வங்கியில் வேலை பார்க்கும் சிவசங்கரன் போத்தி என்ற கதாபாத்திரத்தின் வழியே எமர்ஜென்சி காலகட்டத்தை, சென்னை, அரசூர் மற்றும் தில்லி வழியாக சாமானிய மக்களின் வாழ்க்கையில் அதன் தாக்கத்தை நகைச்சுவை ததும்பும் மொழியில்

சொல்லியிருக்கிறார் இரா.முருகன். எமர்ஜென்சி அரசியலை அதன் மையத்திலிருந்து பார்க்காமல் மக்களின் பார்வையிலிருந்து அதன் தாக்கத்தை

சொல்வதன் மூலமாக மையத்தை உணர்த்தியிருக்கிறார். நாவலுக்கு கிரேஸி மோகன் சாற்றுக்கவி வெண்பா எழுதியதாலோ என்னவோ நாவல் சில இடங்களில் புன்னகை பூக்கவும் பல இடங்களில் வெடித்து சிரிக்கவும் வைக்கிறது. வங்கிகளில் நடக்கும் நாடகத்திற்கான முன்னேற்பாட்டிலிருந்து நாடகமும் அதனைத் தொடர்ந்து வரும் காந்தி வாத்தியாரின் கல்யாண நிகழ்ச்சியும் முழு நீள

நகைச்சுவை படத்திற்கான ஸ்கிரிப்ட். ஆனால் அந்த சிரிப்பிற்கு பின்னால் இருப்பது அவலமான எமர்ஜென்சி வாழ்க்கை. எமர்ஜென்சியில் வங்கிகள் ‘வழங்கிகளாகி’ எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் கடன் தருகிறது. திரும்பி வருமா என்பது பற்றி யாருக்கும் கவலை இல்லை. கடுமையான பத்திரிகை தணிக்கை, அரசுக்கு எதிராக யாரும் பேசக் கூட பயப்படும் நிலை என்று எமர்ஜென்சியின் கிடுக்கிப் பிடிகள் தெளிவாக மனதில் இறங்குகிறது.

 இரயில்கள் சரியான நேரத்திற்கு வருவதும் அரசு பணியாளர்கள் நேரத்திற்கு வேலைக்கு வருவதும் பதிவாகிறது. இது மட்டுமல்லாமல் ட்ரஷரியில் பணிபுரியும் பிரான்சிஸ் தங்கராஜ் என்கிற பாத்திரம் மீதான சாதிய காழ்ப்பு எமர்ஜென்சி பயத்தால் பதுங்கிக் கொள்வது அதன் இன்னொரு முகம். இது சாமான்யர்களின் நாவல். இவர்கள்  மேல் திணிக்கப்பட்ட எமர்ஜென்சி அவர்களின் வாழ்க்கையை என்றைக்கும் திரும்ப முடியாதவாறு மாற்றிப் போட்டதை 1975 தெளிவாக சொல்லி யிருக்கிறது.

1975, இரா.முருகன், கிழக்கு பதிப்பகம், 177/103 அம்பாள் கட்டடம், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை,  சென்னை-14