பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 1

தனிமாவட்டத்தில் பண்ணைப்புரத்தில் இருந்து வந்த பாவலர் சகோதரர்கள் என்கிற இசைச் சகோதரர்கள் தமிழகத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். மிகச்சாதாரணமான பின்னணியில் இருந்துவந்து உலகையே தங்கள் இசைக்கு அடிமைகொண்ட இவர்களின் வெற்றிச்சரித்திரம் எத்தனை முறை கேட்டாலும் பிரமிக்க வைக்கக்கூடியது. இது ஒரு தலைமுறையின் சரித்திரமும் கூட. அன்னக்கிளியில் தொடங்கி, இன்று வரை ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ். 

இசைக் கலைஞர் கங்கை அமரன் தான் கடந்துவந்த பாதையை மிகச்சுவாரசியமாக நக்கீரன் இதழில் எழுதிவந்தார். அது இன்று நூல் வடிவம் பெற்றுள்ளது. இதன் முதல்பாகத்தில் அன்னக்கிளி முதல் நாள் அனுபவம் தொடங்கி எம்ஜிஆருக்கு கதை சொன்னவரைக்கும் ஏராளமான அருமையான வாழ்க்கைச் சம்பவங்களை கங்கை அமரன் சொல்லிக்கொண்டே செல்கிறார். பாரதிராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஆகியோருடைய வாழ்க்கையை பாவலர் சகோதரர்களின் வாழ்க்கையில் இருந்து பிரிக்கவே முடியாது என்பதால் அவர்கள் இருவரும் ரத்தமும் சதையுமாக இந்நூலில் உலா வருகிறார்கள். இளையராஜா, கங்கை அமரன் ஆகியோர் பெற்றிருக்கும் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் கடின உழைப்பு, மன உறுதி, அசலான திறமை ஆகியவற்றையும் இந்நூலைப் படிப்பவர்கள் உணர முடியும்.

பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 1, கங்கை அமரன், வெளியீடு: நக்கீரன், 105, ஜானி ஜான்கான்
சாலை, இராயப்பேட்டை, சென்னை 14